School History
கல்வியின் இலக்குகள் அடிப்படையில் மனித விழுமியத்தினையும் நாகரிக மேம்பாட்டினையும் நிலையாகக் கொண்டுள்ள போதிலும் காலவோட்டத்தில் மகிழ்ச்சிகரமான மனித வாழ்க்கை தேவைகளுக்கான கோரிக்கைகளால் காலத்திற்கமைவாகத் தினப்படுத்தி புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வகையில் இன்றைய தசாப்தத்தின் கல்விச்சுலோகமான “தரமான கல்வியூடாக தரமான சமூகம்” என்னும் இலக்கினை எய்தும் படியான கல்வி முயற்சிகள் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுக்கல்விக்களமான பாடசாலைகளின் கல்விசார் கொள்கைளும் செயற்பாடுகளும் இவ்விரண்டு நோக்கிலேயே முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாடசாலைகள் யாவும் தத்தமது இலக்கு, நோக்கு, சக்தி, முகாமைத்துவத்தெளிவு என்பவற்றிற்கமைவாக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் இதற்கான பயணத்தில் பல தடைகளையும்தாண்டி இலக்குகளை இன்று அண்மித்திருக்கின்றது.
சாம்பல் மேட்டிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போன்று வரலாற்றில் இடம்பிடித்த பாரிய இழப்புக்களிலிருந்து மீண்டெழுந்து காலத்திற்கேற்ற தரரீதியில் மேம்பட்டுவரும் ஒரு கல்லூரியாக மிளிர்கின்றது. யாழ்மாவட்டத்தில் உள்நாட்டுப் போரினால் தனது பௌதிகவளங்களை பெருமளவில் இழந்த முதல் கல்லூரியான இப்பாடசாலை கடினமான பல முயற்சிகளினூடாக இன்று பொலிவுபெற்றுத் தலைநிமிர்ந்துள்ளது.
இக்கல்லூரியானதுஅதன் உருவாக் கத்திலேயே நல்ல கனதியான காரணத்தையும் சிறப்பான திட்டமிடலினையும் ஏற்றத்தாழ்வற்ற சமூகநோக்கினையும் கொண்டதாக அமைந்தது. 1921 ஆம் ஆண்டிலே இப்பிரதேசத்தில்மாதிரிப் பாடசாலையொன்றை அமைப்பதற்கு விளைந்த அரச அதிகாரிகளும், சமூகப் பெரியாரும், சமூகவியலாளர்களும் வடமராட்சிப் பிரதேசத்தின் மையப்பகுதியான கட்டைவேலி, கரவெட்டி வடக்கு பிரதேசத்தினைத் (தற்போது நெல்லியடி) தெரிவுசெய்தனர். அரச தலையீட்டுடனான இம் மாதிரிப் பாடசாலை அமைப்பிற்கு முன்னோடியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கப் பாடசாலைகள் குழுவின் ((The Committee of Government Schools)) தலைவர் 1918.08.09 இல் விடுத்திருந்த கோரிக்கையின்பேரில் நில அளவை நாயகத்தின் (Survior General) 1919.02.05ஆம் திகதிய ஆரம்ப நில அளவைத் திட்டத்தின் பிரகாரம் இப்பகுதியில் 01 ஏக்கர் 3 றூட், 28.1 பேர்ச் நிலம் பாடசாலை தாபிப்பதற்கென சுவீகாரம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாகச் சுவீகரிக்கப்பட்ட நிலத்தில் இக்கல்லூரியானது 1921 இல் தாபிக்கப்ட்டது. சமயச் சார்பு மிஷனரிமார்களும் தனியார்கள் சிலருமே பாடசாலைகளை நிறுவிய காலகட்டத்தில் அரசாங்கத்தினால் இலங்கையில் நிறுவப்பட்ட ஒருசில அரச பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்றாக அமைந்தமை வரலாற்றுப் புகழுடையதாகும். புவியியல்ரீதியில் ஆய்வுசெய்யப்பட்டு வடமராட்சியின் மையப்பகுதியில் திட்டமிடப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட இப்பாடசாலையின் அமைப்பும் சூழலும் இன்றும் அழகொளிர்வதாகும்.
இலவசக்கல்வியின் பிதாமகன் கலாநிதி. C.W.W.கன்னங்கரா அவர்களது சமூகநீதிக்கல்விச் சிந்தனையின் வழி இலங்கை முழுவதிலுமாக அக்காலத்திலிருந்த தேர்தல் தொகுதிகளுக்கு ஒவ்வொன்றாக 54 மத்திய கல்லூரிகளை சகல வள வசதிகளுடனும் உருவாக்கப்பட்டவற்றில் யாழ்மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 4 மத்திய மகா வித்தியாலங்களில் வடமராட்சிக்கென ஒதுக்கப்பட்ட ஒரேயொரு மத்தியமகா வித்தியாலயம் இதுவாகும். மறைந்த சமவுடைமைவாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கந்தையா அவர்களது தீர்க்கதரிசனம்மிக்க தீவிர அக்கறையால் வளம்பெற்று வளர்ந்த இக்கல்லூரியானது வடமராட்சி மக்களது கல்விச்சொத்தாக மேலெழுந்தது. நாடாளவிய ரீதியில் 5ம்தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்கள் இருபாலாரும் இக்கல்லூரியில் அனுமதிபெற்று இலவசமாக விடுதிகளில் தங்கிப்படித்த தங்கமான வரலாறு கொண்டது இக்;கல்லூரி. இக்கல்லூரியின் பழையமாணவர்கள் நாடாளவியரீதியில் வசிப்பிடங்களைக் கொண்டவர்கள், இன்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலிலும் கல்வியிலும் வாழ்விலும் சிறந்து விளங்குகின்றனர்.
இக்கல்லூரியின் செயற்பாடுகளுக்கென மீண்டும் 1947 இல் இரண்டாம் கட்டமாகச் சுற்றாடலிலுள்ள 03 ஏக்கர் 02 றூட், 30.5 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டதுடன் அடுத்துவந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான இருமாடி வகுப்பறைக் கட்டடங்கள், பௌதிக, இரசாயன, உயிரியல் ஆய்வுகூடங்கள், ஆண், பெண்களுக்கான தனித்தனி மாணவர் விடுதிகள், நூல் நிலையம், தொழில்நுட்பச் செயற்பாட்டறைகள், விவசாயப்
பண்ணை, நிர்வாக அலகுக்கான கட்டடம், விளையாட்டு மைதானம், அதிபர் விடுதி முதலான அனைத்து அம்சங்களும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மட்டுமல்லாது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் புலமைப்பரிசில் பெறும் கெட்டித்தனம்மிக்க மாணவர்கள் இக்கல்லூரியில் அனுமதிபெற்று விடுதிகளில் தங்கியிருந்து கல்வி பயின்றனர்.
கிராமப்புற மக்களுக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் யாழ். மாவட்டத்தில் நிறுவப்பட்ட நான்கு மத்திய மகா வித்தியாலயங்களில் யா/நெ.ம.ம.வித்தியாலயம் மாத்திரமே அக்காலத்தில் சிரேஷ்ட உயர்நிலை வகுப்புக்களில் (HSC) விஞ்ஞானப் பிரிவினைக் கொண்டிருந்தது. யாழ் குடாநாட்டில் ஏனைய மத்திய மகா வித்தியாலயங்களிலிருந்து மாணவ, மாணவியர் விஞ்ஞானத்தில் உயர்கல்வி பெறுவதற்காக இக்கல்லூரியில் அனுமதி பெற்று தமது கல்வியை தொடர்ந்தனர். இவர்களில் அநேகமானவர்கள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாயும் உருவாகியதுடன் சிலர், வெளிநாடுகளில் உயர் விஞ்ஞானிகளாகவும் பதவிவகித்தனர். அக்காலத்தில், இக்கல்லூரியில் பணியாற்றுவதற்கென பெரும்பாலான ஆசிரியர்கள் நாளாந்தம் யாழ் நகரிலிருந்து வருகை தந்தனர். பல கல்விமான்கள் வினைத்திறன் மிக்க அதிபர்களாக இக்கல்லூரியில் அடுத்தடுத்து பதவி வகித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
அக்காலத்தில் திட்டமிட்ட புறக்கிருத்திய செயற்பாடுகளில் இக்கல்லூரி இப்பிரதேசத்தில் முதன்மையான கல்லூரியாக திகழ்ந்தது. கடேற் தொண்டர் படையணி, சாரணர் படையணி என்பவற்றோடு கால்பந்து, கிரிக்கட் முதலான பெருவிளையாட்டுகளும் தடகள் விளையாட்டுக்களும் சிறப்பான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு ஏதுவாக 1959 இல் 3ம் கட்டமாக சுற்றாடலில் உள்ள 2 ஏக்கர் 5 றூட் 6.6 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டது. இக்கல்லூரியின் வள வசதிகளை பெருக்குவதில், வடமராட்சி பிரதேசத்தின் புகழ் பூத்த பாராளுமன்ற உறுப்பினரும், சமூக நீதிக் கொள்கையாளரும் பிரபல பொதுவுடமையாளருமான திரு.பொன்.கந்தையா அவர்கள் சிறப்பான பங்காற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். வடமராட்சி பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மத்திய மகா வித்தியாலயத்தின் உருவாக்கம் அமைப்பு சமூக நீதியான கல்விக் கொள்கை என்பவற்றில் மிக்க விளக்கமும் வெளிச்சமும், தூரநோக்கும் உள்ள ஒரு கல்விமானாகவும் அரசியல் வாதியாகவும் செயற்பட்டு அவரிட்ட அத்திவாரத்தில் இக்கல்லூரி இன்றும் தலைநிமிர்ந்து நிற்பதனை அவதானிக்கலாம். கம்பீரமான இருமாடி வகுப்பறைக் கட்டடம், விஞ்ஞான ஆய்வுகூடம் தொழில் நுட்ப ஆய்வுகூடம் முதலியவற்றை அமைத்து ஏழை, மற்றும் நடுத்தர வருமான மக்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை ஊட்ட அவர் வழிசமைத்தார். இக்கல்லூரியில் அவரது பங்களிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். அவரது பெயரில் திறந்து வைக்கப்பட்ட இருமாடிக்கட்டடம் இக்கல்லூரியி;ல் இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதைக்காணலாம்.
அன்றைய இக்கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் ஏனைய பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை விடவும் முன்னேற்றகரமான வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. விடுதிகளில் தங்கியிருந்து கல்விபயிலும் மாணவர்களின் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் இங்கே விசேடமாகக் குறிப்பிடத்தக்கனவாகும். புலமைப்பரிசில் பெற்ற உள்ளுர் மற்றும் வெளிமாவட்ட மாணவர்களே பெரும்பாலும் விடுதிகளில் தங்கியிருந்தனர். ஆண், பெண், இருபாலாருக்கும் தனித்தனி விடுதிகள் இயங்கி வந்தன. பெரும் எண்ணிக்கையான பாடசாலைப் பணியாளர்களும், உத்தியோகத்தர்களும் கடமையாற்றி வந்தனர். விவசாயப் பண்ணையிலிருந்து விடுதிகளுக்கு தேவையான காய்கறிகளும் பாற் பொருட்களும் பெருமளவில் பெறப்பட்டன. வருடத்தில் ஒருமுறை விடுதியில் தங்கியிருந்து கற்கும் மாணவர்களுக்கான அகில இலங்கை கல்விச் சுற்றுலாவிற்கு இலவசமாக ஒழுங்குகள் செய்யப்பட்டன. 1971 இல் இக்கல்லூயின் வடக்கு புறமாகவுள்ள, அன்று செல்லையா பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட தனியாரால் நிறுவப்பட்ட பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை நலிவுற்று அப்பாடசாலையின் கட்டிடம் பயன்பாடற்று இருந்தமை காரணமாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் க.பொ.த (உ.த) கலைப்பிரிவு அங்கு மாற்றப்பட்டதுடன் நெல்லியடி ம.ம.வித்தியாலயத்தின் இணைக்கப்பட்டது. ஆண், பெண் மாணவர்கள் அடங்கலாக 2000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இக்காலகட்டத்தில் பல புகழ்பூத்த கல்விமான்கள் அதிபர்களாக இருந்து அரும்பணியாற்றினார். கலாநிதி.ளு சிவப்பிரகாசம், திரு. இரத்தினசபாபதி, திரு.மு.சிவசிதம்பரம் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கோர்.
1977 இல் நாட்டில் அரசியல் பிரச்சினைகள் முனைப்படைந்திருந்த நிலையில், உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.த. இராசலிங்கம் அவர்கள் தனது அரச நிதி ஒதுக்கீட்டின் மூலம் அழகானதும் நவீனத்துவமுடையதுமான ஆராதனை மண்டபத்தினை
கல்லூரிக்கென அமைத்துக் கொடுத்தார். பாடசாலை, மற்றும் கல்வித்திணைக்கள நிகழ்வுகள் மட்டுமின்றி சமூகத்தின் பொது நிகழ்வுகள் பலவும் இவ்வாராதனை மண்டபத்தில் கோலாகலமாக அரங்கேறின.
1987 வரையில், பாடவிதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்புற்று இருந்த இக்காலங்களில் பல புகழ்மிக்க அதிபர்களும் ஆசிரியர்களும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இக்காலக்கட்டத்தில் இக்கல்லூரியின் வளர்ச்சியில் அரும்பணியாற்றிய அதிபர்களில் திரு.K.குணரத்தினம்,திரு.V.K.நல்லையா, திரு.S.றோய் காந்தராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
கால ஓட்டத்தில் இக்கல்லூரியின் பெண் மாணவர்களின் வகுப்புப் பிரிவுகள் இணைக்கப்பட்ட செல்லையாபள்ளிக்கூட கட்டிடத்தில் இயங்கவைக்கப்பட்டன. 1987இல் வடமராட்சி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் இக்கல்லூரியின் கட்டுமானங்களில் பெரும்பாதிப்புக்கள் ஏற்பட்டன. கல்லூரியின் பிரதான நிர்வாகக் கட்டடம் இராசலிங்கம் ஆராதனை மண்டபம், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் முதலான வளங்கள் முற்றாக சேதமடைந்தன. இதன் பின்னர் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் பலவீனமடைந்ததுடன் உயர் நிலையில் இருந்த புறக்கிருத்தியங்களும் வெகுவாய் பாதிப்புற்றன. இதற்கு முன்னைய காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே சிறப்பாக செயற்பட்டு வந்த இக்கல்லூரியின் கடேற் தொண்டர் படையணியின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. வருடா வருடம் தியத்தலாவை வரை பயிற்சி பெற்ற கடேற் தொண்டர் படையணிக்கு 1960 களில் 2ம் லெப்ரினன்ட் திரு T.பாலேந்திரன், திரு. அருளையா ஆகியோர் ஆற்றிய பணிகள் இன்றும் நினைவு கூறப்படுகின்றன. 1987இன் பின்னர் இக்கல்லூரியின் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தளம்பலுற்று நலிவடைந்த நிலையில் நாட்டு சூழ்நிலை காரணமாக மாணவர் பலர் புலம் பெயர்ந்த காரணங்களினால் குறிப்பாக ஆண் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தமையால் ஆண் மாணவர்களது எண்ணிக்கை வெகுவாய் குறைவடைய நேரிட்டது.
அண்மைய 1990களில் இக்கல்லூரியின் தோற்ற இலக்கினை மறந்து குறுகிய நோக்கில் ஆண்{பெண் என இரு பாடசாலைகளாகப் பிரித்தமையானது ஏற்படுத்திய நன்மைகளைவிடத் தீமைகளையே அதிகமாக்கியது. வலுவான ஒரு மாணவர் தொகை நலிவாயிற்று. யுத்த அனர்த்தத்தினால் பௌதிகவளங்கள் பாதிக்கப்படலாயின. மாணவர் எண்ணிக்கையும் குறைவடைந்தது. இந்நிலையில் பொறுப்பேற்ற அதிபர்கள் மிக்க சிரமங்களின் மத்தியில் ஒரு தரமான பாடசாலையாக மீண்டும் கொண்டுவருவதற்கு முயன்றனர். ஓய்வுபெற்ற அதிபர் திரு.சி.சிற்றம்பலம் அவர்கள் கல்லூரியின் தரத்தினைத்தக்கவைக்கும் பணியில் நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாக ஈடுபட்டார். கல்வி, விளையாட்டு ஆகிய இருதுறைகளிலும் மீண்டும் கல்லூரி தன்னம்பிக்கையுடன் மீண்டெழத் தொடங்கியது. இதன்பின்னரான இன்றைய கல்லூரி நிர்வாகம் நவீன கல்விச்சீர்திருத்த இலக்குகளோடு நிலைத்த அபிவிருத்திக்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து தரரீதியான பல அடைவுகளை ஈட்டி தேசியரீதியில் தரம்மிக்க ஒர்கல்லூரி என்னும் இலக்கினை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கின்றது. நவீன முகாமைத்துவ எண்ணக்கருக்களின் அடிப்படையில் பாடசாலைச்சமூகத்தினரான பெற்றோர், பழையமாணவர்கள் அனைவரையும் ஆரோக்கியமான விதத்தில் உள்வாங்கி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தி கடினமான பல இலக்குகளைக்கூட எட்டிப்பிடித்துள்ளது.
மாணவர் எண்ணிக்கை இரண்டுமடங்காக (1374) அதிகரித்துள்ளதுடன்இதில் பெண் மாணவர்களது எண்ணிக்கை சுமார் 411ஆக அதிகரித்தமையானது கல்லூரியில் தோற்றத்தின் நோக்கத்தினை மீண்டும் நிறைவு செய்துள்ளது. மாணவர்விடுதி, பாடசாலைத்தோட்டம், விளையாட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விளையாட்டு மைதான விஸ்தரிப்பு, கணனி ஆய்வுகூடங்கள், வகுப்பறைக் கட்டிடங்கள், ஆராதனை மண்டபம், சுற்றுப்புற அழகு, மாணவர்கல்வி அடைவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, இணைப்பாடவிதான சாதனைகள், ஆங்கில மொழிமூல கல்விமேம்பாடு, மாணவர் சிற்றுண்டிச்சாலை வசதிகள், முதலுதவி அலகு, ஆண்{பெண் சாரணியம், மாணவர் கடேற் அணி, கூடைப்பந்தாட்டத்திடல், முகாமைத்துவ மேம்பாடு முதலான அனைத்து விடயங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று ஓர் உதாரண கல்லூரியாக இக்கல்லூரி திகழ்கின்றது.
எமது கல்லூரியில் மாணவர்களது நலனோம்பு செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாடசாலை வேளையில் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவ அறை வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுகயீனமுறும் மாணவரை வைத்தியசாலைக்கு அல்லது வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான முச்சக்கரவண்டி வசதியும் உள்ளது. இதற்காக எமது கல்லூரிக்கு முச்சக்கரவண்டியொன்று செல்லமுத்தூஸ் உரிமையாளர் திரு.சு.சண்முகசுந்தரம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இன்று மிக முக்கியத்துவம் பெறும் சுற்றுச்சூழல் தொடர்பான மதிப்பீட்டில் எமது பாடசாலை மாகாணமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது
இலங்கையில் ஒரு கல்வி வலயத்திற்கு ஒரு பாடசாலை என்னும் தெரிவு அடிப்படையில் இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு 2009ல் வடமராட்சி வலயத்திலிருந்து எமது பாடசாலையைத் தெரிவு செய்தது. எமது கல்லூரி அதிலிருந்து யுனெஸ்கோ பாடசாலைக் கழகத்தை அமைத்து யுனெஸ்கோ இணைந்த பாடசாலைச் செயற்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. எமது கல்லூரியில் இயங்கிவரும் ஆண் சாரணர்கள் அமைப்பும் 2008ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட பெண்சாரணிய அமைப்பும் சிறப்பாக இயங்கிவருகின்றது. எமது சாரணமாணவர்கள் செல்வன். ஆ. பிரகாஸ், செல்வன். பா. அகிலன் ஆகிய இருவரும் 2010 இல் ஜனாதிபதி சாரணர் விருது பெற்று சாதனைபடைத்தார்கள். “வளர்ந்;துவரும் சாரணசமூகம்” எனும் கருப்பொருளில் அகில இலங்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் எமது பாடசாலை தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றதுடன் கௌரவ கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களிடமிருந்து எமது மாணவர்கள் விருதுகளையும் சான்றிதழ்களையும்; பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
2005இல் மாணவர் விடுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு (தற்போது விடுதி ஊழியரின்மையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது) பாடவிதானம், இணைப்பாடவிதானம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் வடமராட்சியில் தனியான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. ஆண், பெண் சாரணர் அமைப்புக்கள், கடேற் படையணி என்பவற்றோடு ஆண், பெண் மாணவர்களுக்கான 25 க்கும் மேற்பட்ட பெரு விளையாட்டுக்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
2005 இல் இது ஒரு “நவோதயப் பாடசாலை” ஆகத் தெரிவுசெய்யப்பட்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்ததுடன் 2011 ஒக்ரோபர் 06 ஆம் திகதியிலிருந்து “தேசியப் பாடசாலை” ஆகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இன்று 06.11.2013 முதல் யாஃநெல்லியடி மத்திய கல்லூரி என பாடசாலைகள் கட்டமைப்புக் குழுவினால் கல்லுஸரிச்சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய பெயர் மாற்றம் செய்யப்பட்டது.வடமராட்சிப் பிரதேசத்தில் தற்போதுள்ள ஒரேயொரு தேசியப் பாடசாலை இதுவாகும். அத்துடன் மகிந்தோதய சிந்தனையின் கீழ் க.பொ.த உயர்தரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப்பிரிவையும் கொண்டுள்ளது. சிறப்பான சுற்றுச்சூழல் மற்றும் முகாமைத்துவச் செயற்பாடுகளைக் கொண்ட பாடசாலையாகவும் பல மட்டங்களில் இக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டதுடன்; யுனெஸ்கோ பாடசாலையாகவும் சக்திவளமுகாமைத்துவப் பாடசாலையாகவும் இக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டு அச் செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. ; “வெப் பாடசாலை” ஆக உள்வாங்கப்பட்டதோடுசிறப்பானகணனி ஆய்வுகூடங்களையும் கொண்டு விளங்குகிறது. கணிதப் புதிர்ப் போட்டிகள், விஞ்ஞானப் புதிர்ப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மதர் ஸ்ரீலங்கா போட்டிகள் என்பவற்றிலும் தேசிய மட்டம் வரை விருதுகளைப் பெற்றதுடன் ஆங்கில மொழித்தின, தமிழ் மொழித்தினப் போட்டிகளிலும் பல மாகாண மற்றும் தேசிய விருதுகளையும் இக்கல்லூரி மாணவர்கள் வருடா வருடம் பெற்று வருகின்றனர்.
பிரதேசத்தில் ஏறபடுகின்ற இடர்க்காலங்களில் (இயற்கை மற்றும் யுத்தம்) பிரதேச மக்களின் உடனடித் தங்குமிடமாக இக்கல்லூரியே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.
சிறந்த பிள்ளைநேயப் பாடசாலையாக வலய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்ட இக்கல்லூரியானது அழகிய சுற்றுப்புறம், கலையரங்கம், அதனோடிணைந்த பூந்தோட்ட முற்றம், பாடசாலைத் தோட்டம், அழகிய மூலிகைத் தோட்டம், விளையாட்டு மைதானம், மரப்பூங்கா முதலியவற்றோடு சிறந்த முகாமைத்துவத்துடனும் அர்ப்பணிப்புடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சேவையுடனும் வளர்ந்து வருகின்றது.